ஜெ. அரசியலின் எதிர்காலம்?

ஜெ. அரசியலின் எதிர்காலம்?
Published on

நான்கு ஆண்டு சிறை, நூறு கோடி அபராதம்.. தமிழக முதல்வராக பெங்களூரு போன ஜெயலலிதா, அங்கிருந்து நேரடியாக சிறைக்குச் சென்றுவிட்டார். முதல்வர் பதவியும் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் ஒரே நாளில் போய்விட்டன. இனிவரும் பத்தாண்டுகளுக்கு தமிழகத்தின்  அரசியல் சூழ்நிலையை தன் வலிமையான பேனா முனையால் மாற்றிவிட்டார் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி குன்ஹா. நீதித்துறை மீது பலருக்கும் நம்பிக்கை போயிருந்த சூழலில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.  இந்த தீர்ப்பின் விளைவுகள் பற்றி பலரிடமும் பேசியதில்

கிடைத்த தகவல்கள் இங்கே:

1)    27-ஆம் தேதி தீர்ப்புவருவதற்கு சில மணிநேரம் முன்பாகவே அம்மாவுக்கு வெற்றி என்று பட்டாசு வெடித்து உற்சாக நடனம் ஆடிய தொண்டர்களைக் கொண்ட கட்சி அதிமுக. ஏற்கெனவே கூர்மையான கத்தியாக இந்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவின் தலைக்கு மேல் 17 ஆண்டுகளாகத் தொங்கிக் கொண்டிருந்த நிலையில்தான் தமிழக அரசியலில் பல அசைக்கமுடியாத அரசியல்வெற்றிகளை அவர் பெற்றுவந்தார். அவரது கட்சிக்குள் இந்த தீர்ப்பால் அவரது இடமும் மதிப்பும் கொஞ்சமும் மாறப்போவதில்லை. அவருக்கு சவால் விடக்கூடியவராகக் கருதப்பட்ட சில புள்ளிகளும் ஓரங்கட்டப் பட்டுவிட்டனர்.

2)    சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். அம்மாவைக் காட்டிக் கொடுக்காமல் சிறைக்குச் சென்ற விசுவாசிகள் என்பதால் இயல்பாகவே இவர்களின் குடும்ப ஆதிக்கம் மேலும் கட்சிக்குள் விரிவாக வாய்ப்புண்டு.

3)    ஊழல் வழக்கில் சிறை என்பது ஜெயலலிதாவுக்குப் புதிது அல்ல. 1996-ல் திமுக ஆட்சியில் சிறைக்கு அனுப்பப்பட்டவர். 2000-ல் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிடமுடியாத போதும் முதல்வர் ஆகி பதவியை விட்டு விலகி, சிலமாதம் காத்திருந்து தண்டனை ரத்து ஆனதும் மீண்டும் முதல்வர் ஆனவர். ஆகவே இந்தத்தீர்ப்பு அவரது மன உறுதியைக் குலைக்காது. டான்சி வழக்கு, பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு, ஸ்பிக் பங்குகள் விற்பனை வழக்கு, நிலக்கரி இறக்குமதி வழக்கு, வண்ணத் தொலைக்காட்சி வழக்கு, பிறந்த நாளுக்கு பரிசாக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்ற வழக்கு, கிரானைட் வழக்கு என பல வழக்குகளில் தப்பியவர்.  கடைசியாக நீண்டதொரு சட்டப்போராட்டத்துக்கு அவர் தயாராவார்.

4)    கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய இடங்களில் அவரது மேல்முறையீடு மறுக்கப்பட்டால் இந்த நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து, அதன் பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஆறு ஆண்டுகள் அவரால் சட்டமன்றத்துக்குப் போட்டியிடமுடியாது. மொத்தம் பத்து ஆண்டுகள். ஆனால் தனிநீதிமன்றத்தைத் தாண்டிய உயர்நீதிமன்றங்களில் இந்த வழக்கு எப்படி கொண்டு செல்லப்படும் என்பதில் அவரது எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.

5)    விரைவில் அவர் பிணைபெற்று சிறையிலிருந்து வெளியாகிவிடுவார் என்பதே இயல்பாக நடக்ககூடியது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2016 சட்டமன்றத் தேர்தல்வரை அவரது ஆளுமைக்குட்பட்ட ஒரு முதல்வர் ஆட்சி செய்தாலும் லகான் ஜெயலலிதாவிடமே இருக்கும்.

6)    2ஜி ஊழல் வழக்கு திமுக கட்சியைத் தாண்டி பொதுமக்களிடம் அக்கட்சியின் செல்வாக்கைக் குலைத்தது. அதேபோல் பொதுமக்களிடம் இந்த ஊழல் குற்றச்சாட்டு, தண்டனை ஆகியவை ஜெயலலிதாவின் செல்வாக்கைக் குலைக்கலாம். சிலர் சொல்வதைப் போல் இவர் மேல் அனுதாப அலை வீசுமா என்பதை உடனடியாகக் கூற இயலாது.

7) திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த பத்தாண்டுகள் சோதனைக்காலம். திமுகவுக்கு 2ஜி, மாறன் சகோதரர்களுக்கு ஏர்செல்-மாக்ஸிஸ் வழக்கு. ஸ்டாலின் - அழகிரி மோதல். அதிமுகவில் தலைவிக்குச் சிறைத் தண்டனை. இதனால் தமிழகத்தில் இருகட்சிகளுமே பொதுமக்கள் செல்வாக்கை இழக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் திமுக அதிமுக அல்லாத பிற கட்சிகள் அழுத்தமாகக் காலூன்றலாம்.

8) பொதுவாக  பின்னணியில் நிலவும் அரசியல் காரணங்களையும் சில சமயங்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். கர்நாடகத்தில் முந்தைய பாஜக மாநில அரசு, ஜெயலலிதா வழக்கில் மிகவும் தீவிரமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞரான பிவி ஆச்சார்யாவை என்ன செய்தது என்பது ஞாபகம் இருக்கலாம். அவர் ஒன்று கர்நாடக தலைமை வழக்கறிஞராக இருக்கவேண்டும் அல்லது ஜெயலலிதா வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தும் வழக்கறிஞராக இருக்கவேண்டும் என்று சொன்னது. ஆச்சார்யா பின்னதையே தேர்ந்தெடுத் தாலும் பிறகு தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிவிட்டார். ஆனால் அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை.

9) 1997-ல் இந்த வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடிக்காமல் எதிர்கொண்டிருந்தாரென்றால் அவர் ஒருவேளை சென்னையிலேயே மிகவும் குறைவான தண்டனையுடன் தப்பியிருக்கலாம். நீதிபதி குன்ஹா 20ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சொன்னபோது கடைசி நேரத்தில் பாதுகாப்புக் காரணங்களால் நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்றவேண்டும் என்று ஜெயலலிதா மனுச் செய்யாமல் இருந்திருக்கலாம்.  இப்படிப் பல ‘லாம்’கள் இந்த வழக்கில் உள்ளன. இனி காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். இப்போதைக்கு நாம் பார்வையாளர்கள் மட்டுமே. புதிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் காலச்சக்கரம் சுழன்றுள்ளது!

அக்டோபர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com